Friday, 13 November 2015

ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவில்

ஸ்ரீ ராம ஜெயம்
ஓம் நமோ நாரயணாய ஸ்ரீ மத் கோதாயை நம
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
அருள்மிகு ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவில், வீரகேரளம்புதூர்


மூலவர் : அருள்மிகு நவநீதகிருஷ்ணன் சுவாமி
உற்சவர் : ஸ்ரீதேவி ,பூமாதேவி சமேத நவநீதகிருஷ்ணன்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி ,பூமாதேவி
தல விருட்சம் : நெல்லி மரம்
தீர்த்தம் : சிற்றாறு
ஆகமம்/பூஜை :
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீரகேரளம்புதூர்
ஊர் : வீரகேரளம்புதூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

“நவநீதம்” என்றால் “வெண்ணெய்” எனப்பொருள். தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

“ஏ மனிதனே! நீ தண்ணீரில் கலக்கும் பால் போல் அல்லாமல், அந்த பாலில் இருந்து பிறந்து அந்த பாலிலேயே கலக்க மறுக்கும் வெண்ணெயைப் போல், ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இந்த பூமியில் வாழ். பிருந்தாவனத்து கோபியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, எப்படி என்னை வந்தடைந்தார்களோ, அப்படியே வந்துசேர்” என்று உணர்த்தவே, அவன் பூமியில் அவதரித்தான்.வெண்ணெய் திருடினான். ஆம். உலகப்பற்று இல்லாமல், அவனையே எண்ணிக்கொண்டிருந்த மனிதர்களுக்கு அவன் மோட்சம் தந்தான். அவனை அடைய மறுத்து வெறுத்த கம்சன்,சிசுபாலன், துரியோதனன், போன்றவர்களைக் கட்டாயப்படுத்தி மோட்சத்திற்கு அனுப்பி“கருணாமூர்த்தி” என பெயர் பெற்றான்.

ஊர்ச்சிறப்பு
தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும் , நிலவளமும் நிறைந்த குற்றாலச் சாரலின் குளுமையுடன் சிற்றாற்றின் வடபுரம் அமைதியும் இயற்கை அழகும் கொண்ட பேரூராக “வீரகேரளம்புதூர்” அமைந்துள்ளது. இங்கு ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் அமைப்பு
இத்திருக்கோயிலின் கர்ப்பகிரஹத்தில் “ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்” இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் ஏந்தியவாறு புன்முறுவலுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.கற்பூர ஆரத்தியின்போது அவரது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்.

உற்சவமூர்த்தி
கர்ப்பகிரஹத்தின் முன்புள்ள மண்டபத்தில் “ஸ்ரீ தேவி, பூமாதேவி நாச்சியார்கள்” சமேதராக “ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்” அருள்பாலித்து வருகிறார்.
ஸ்ரீ விமானம்
கர்ப்பகிரஹத்தின் மேலே செப்புக்கலசத்துடன் கூடிய விமானம் உள்ளது. இவ்விமானத்தில் “கிழக்கு முகமாக ஸ்ரீநவநிதகிருஷ்ணனும்,தெற்கு முகமாக ஸ்ரீ தட்சிணா மூர்த்தியும் மேற்கு முகமாக ஸ்ரீ யோக நரசிம்மரும்,வடக்கு முகமாக ஸ்ரீ பிரம்மாவும்” எழுந்தருளியுள்ளனர்.

இதர தெய்வங்கள்

தசாவதாரம்
உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர்.
. இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லன்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன. கல்கி அவதாரம் கையில் கேடையமும், வாலும் ஏந்தியிருக்கிறது.

தன்வந்திரி பகவான்

இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம் , தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி(தனிக்கோயிலில்) காணப்படுகிறார். இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது. இங்கு இத்திருக்கோயிலின் தன்வந்திரி பகவான் தனி சந்நிதியில் உள்ளார்


தும்பிக்கையாழ்வார்
பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தில் பன்னிரு ஆழ்வார்களுடன் அமைந்துள்ளார்.

ஆழ்வார்கள்
திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிருவர் ஆழ்வார் எனப்படுவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம்.

ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர்.

கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. தேவார மூவரைப் போல திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருகப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 11-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார்.
பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு:

• பொய்கையாழ்வார்
• பூதத்தாழ்வார்
• பேயாழ்வார்
• திருமழிசையாழ்வார்
• நம்மாழ்வார்
• மதுரகவி ஆழ்வார்
• குலசேகர ஆழ்வார்
• பெரியாழ்வார்
• ஆண்டாள்
• தொண்டரடிப்பொடியாழ்வார்
• திருப்பாணாழ்வார்
• திருமங்கையாழ்வார்



இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் ஏனையோர்க்குக் காலத்தால் முற்பட்டோர் ஆவர். எனவே இவர்களை முதல் ஆழ்வார்கள் என்பது மரபு.
இங்கு இத்திருக்கோயிலின் பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர்.

ராமானுஜர்
வைணவத்தை வாழவைத்த ராமானுஜர் தனி சந்நிதியில் உள்ளார்.

ஸ்ரீ கருடாழ்வார்
உற்சவமூர்த்திக்கு எதிரில் “பெரிய திருவடி”என்றழைக்கப்படும் “ஸ்ரீ கருடாழ்வார்” பெருமாளை நோக்கி கைகூப்பி வணங்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார்.

ஸ்ரீ ஆஞ்சநேயர்
உற்சவர் எழுந்தருளியுள்ள மண்டபத்தின் வடக்குத் தூணில் “சிறிய திருவடி” என்று போற்றப்படும் “ஸ்ரீ ஆஞ்சநேயர்” சேவை சாதிக்கிறார்.


பாடியவர்கள்

அண்ணாமலை ரெட்டியார்
ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் வீரை தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார்.


திருவிழா

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாக கொடியேற்றமும் உத்திரம் அன்று தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும். தை பொங்கல் மறுநாள் பாரிவேட்டையும்,தசரவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் ,வைகுண்ட ஏகாதிசியில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும் ,கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். தமிழ் மாதம் கடைசி சனிகிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.வாரத்தில் புதன் ,வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திறக்கும் நேரம்
காலை 5- 8 மணி வரை, மாலை 5-7.30 மணி வரையிலும் கிருஷ்ணரை தரிசனம் செய்யலாம்.

பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ணருக்குரிய விசேஷ நாட்களில் இத்தலத்திற்கு வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு கிருஷ்ணரை தரிசித்து, பால்பாயாசம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கிருஷ்ணர் தன்னைப்போலவே ஒரு அழகான குழந்தை பிறக்க வரமளித்திடுவார் என்பது ஐதீகம்.

முகவரி
அருள்மிகு ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவில்,
வீரகேரளம்புதூர்- 627 861 திருநெல்வேலி மாவட்டம்.